ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டு ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு என்.எம்.எஸ். காம்படுவுண்டில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மாருதி வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மது விலக்கு டி.எஸ்.பி. சண்முகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் தலைமையில் போலீசார் நள்ளிரவில் என்.எம்.எஸ் காம்பவுண்ட் பகுதிக்குச் சென்றனர். அங்கு வாகனம் நிறுத்துமிடத்துக்கு சென்று ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு நின்ற மாருதி வேனை திறந்து சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ ஹான்ஸ் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் சிவானா மாவட்டம் ஜல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மான்சிங் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தலுக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சித்து மற்றும் சரவணன் என்பவர்கள் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
ராஜஸ்தானில் இவர்களிடம் இருந்து தான் மான்சிங் புகையிலை பொருட்களை வாங்கி வந்து ஈரோட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. தற்போது சித்து மற்றும் சரவணன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க மதுவிலக்கு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் 350 கிலோ ஹான்ஸ் மற்றும் மாருதி வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலையில்தான் இரண்டு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.