திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சாரதா, இந்த தம்பதியினர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு 9 வருடமாக குழந்தை இல்லாததால், குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக முயற்சி எடுத்து வந்த நிலையில், கோவிந்தராஜுக்கு கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகியான பாலகுமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவர் பணத்துக்கு குழந்தை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் பேரம் பேசப்பட்டு ரூ. 2 லட்சம் தருவதாகக் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து முன்பணமாக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு கோவிந்தராஜின் தாய் சுசீலா மூலம் சிறுக சிறுக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் ஒரு வருடத்திற்கு மேலாகியும் குழந்தையை பாலகுமார் வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கோவிந்தராஜ், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதனடிப்படையில், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பாலகுமாரை கைது செய்தனர். மேலும் குழந்தைக்கு பணம் கொடுத்து நீண்ட நாள் ஆனதால் பணம் கொடுத்த கோவிந்தராஜ் மற்றும் பாலகுமார் போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில், “இதெல்லாம் இல்லீகலா பண்ற வேலை, நேக்காகத் தான் பண்ண வேண்டும். கண்டிப்பாக பண்ணிக் கொடுக்கிறேன்” என்று பேசியுள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், குழந்தைகள் திருடும் சம்பவங்களும் ஆங்காங்கு நடந்தேறி வரும் நிலையில், குழந்தை கடத்தல் என்பதைத் தொழிலாகச் செய்து வரும் நபர்களின் ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.