Skip to main content

போதையில் காரை ஓட்டிவந்த பிரமுகர்; விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ - பரபரப்பு சம்பவம்!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
person who causes an accident by driving under the influence of liquor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா(45). இவர் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து  ஷேர் ஆட்டோவில்  சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி, அடியத்தூர் பிரியா, மேல் அச்சமங்கலம் சியாமளா, சாமுண்டி வட்டம் பகுதியைச் சேர்ந்த ராணி ஆகியோரை தனது ஷேர் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு  ஆசிரியர் நகர் சென்று கொண்டு இருந்தார்.

அடியத்தூர் பகுதிக்கு செல்ல மேம்பாலம் மீது ஏறும் போது எதிரே மகேந்திரா சைலோ கார் தாறுமாறாக ஓட்டி வந்த ஆசிரியர் நகர் அடுத்த அன்னை நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தினார். மோதிய வேகத்தில் ஷேர் ஆட்டோ மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி எரியப்பட்டது. இதில் மூதாட்டி ராணி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரியா மற்றும் ஜோதி, ஆட்டோ ஓட்டுநர் ராஜா மற்றும் சியாமளா என்கிற பெண் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு வாகன ஓட்டிகள், அக்கம் பக்க கடைக்காரர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆட்டோ ஓட்டுநர் ராஜா மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கும், கை முறிந்த பிரியா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சியாமளா தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரின் உரிமையாளர் சரவணன் விபத்து ஏற்படுத்தியபோது முழு போதையில் இருந்துள்ளார். அந்த போதையிலும் விபத்து ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய சரவணனைத் தேடி வருகின்றனர். இவர் அப்பகுதியில் முக்கிய பிரமுகர் என்கிறார்கள். இதனால் இவரை தப்பிக்க வைக்கும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சியும் அதிலிருந்து இருவர் தூக்கி எறியப்பட்டு மேம்பாலத்திற்கு கீழே வந்து விழும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்