திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 30.03.22-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் காவல்துறையினர் ராபர்ட் செல்லையா (25) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும் விசாரணையில் ராபர்ட் செல்லையா மீது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் முன்விரோதத்தால் கொலை செய்த வழக்கு உட்பட 4 வழக்குகளும், திருச்சி மாநகரில் பொதுமக்களை ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி பணம் கொள்ளையடித்த வழக்குகள் மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
ராபர்ட் செல்லையா, தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் திருச்சி மாநகர் காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் அறிக்கை ஒன்றை அளித்தார். அந்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து ராபார்ட் செல்லையா உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.