சீர்காழி தங்கவியபாரி வீட்டில் நடந்த இரட்டைக் கொலையின் மூலையாக இருந்து செயல்பட்ட முக்கியக் குற்றவாளியான கருணாராம், கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கடந்த 27ஆம் தேதி அதிகாலை நகை, பணத்துக்காக இருவரைக் கொலைசெய்துவிட்டு கும்பகோணம் வந்த ராஜஸ்தான் இளைஞரான கருணாராம் என்பவரை, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீஸார் முத்துப்பிள்ளை ஆகியோர், மண்டபம் பகுதியில் காரோடு வளைத்துப் பிடித்தனர்.
பிடிபட்டவர் முதலில் இந்தி மொழியிலும் பின்னர் தமிழிலும் பேசினார். துருவி விசாரித்ததில் சீர்காழி கொலையில் முக்கியக் குற்றவாளி என்பது தெரிய வந்தது. பணத்துக்காக இரட்டை கொலையை செய்ததாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட கருணாராம், கடந்த 20 ஆண்டுகளாக கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருகிறார் என்றும் கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் செருப்புக் கடை வைத்திருப்பதையும் போலீஸார் விசாரணையில் தெரிந்துகொண்டனர்.
கருணாராம், தான் மற்ற 3 பேரையும் தனது காரில் சீர்காழிக்கு அழைத்துச் சென்றதாகவும், பொதுமக்கள் சுற்றிவளைப்பதைத் தெரிந்துகொண்டு காரை எடுத்துக்கொண்டு தப்பிவந்துவிட்டதாகவும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இரட்டைக் கொலை வழக்கில் கருணாராம்தான் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது