தமிழகம் முழுக்க முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் அக்கட்சியினர் அந்தந்த ஊர்களில் அமைதி ஊர்வலம், கலைஞர் உருவ படத்திற்கு மலர் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு அமைதி பேரணி நடந்தது. கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு, கோவை வடக்கு, கோவை கிழக்கு மாவட்ட திமுகவின் சார்பில், நடைபெற்ற இப்பேரணியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இந்த பேரணி நடந்தது.
சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் மெயின்ரோடு, வி.கே.கே.மேனன் சாலை சந்திப்பிலிருந்து ஜெயா பேக்கரி வழியாக காந்திபுரம் அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலமாக சென்று, கலைஞரின் உருவ படத்திற்கு திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா. கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா(எ) கிருஷ்ணன், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி, திமுகவின் மூத்த முன்னோடிகள், அனைத்துக் கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.