கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையை ஒட்டி உள்ள எடுத்தவாய்நத்தம் புதுக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மரவள்ளி செடி பயிர் செய்து உள்ளார். இந்த செடிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே கஞ்சா செடி வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கச்சராபாளையம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் திடீரென்று கண்ணன் நிலத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு இடை இடையே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கஞ்சா செடிகளை அழித்ததுடன் விவசாயி கண்ணனையும் கைது செய்துள்ளனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கண்ணனுக்கு கஞ்சா விதை எப்படி கிடைத்தது, ஏற்கனவே இதுபோன்று கஞ்சா பயிர் செய்துள்ளாரா, கஞ்சா செடிகளை வெளியில் எங்கும் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.