சேலம் அருகே, மனைவியின் நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால் மனம் உடைந்த இளம்பெண், தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் லட்சுமணன். கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (26).
இவர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷமிதாஸ்ரீ (7), ஷாலினி (3) ஆகிய இரு பெண் குழந்தைகளும், வெற்றிவேல் 11 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 25ம் தேதி லட்சுமணன் திருச்செங்கோட்டிற்கு வேலைக்குச் சென்றுவிட்டார். மறுநாள் வீடு திரும்பியபோது, ஜெயா மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மனைவியும் குழந்தைகளும் சென்ற இடம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. உறவினர்களுடன் பல இடங்களில் தேடிப்பார்த்தார். இந்நிலையில், கொழிஞ்சிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பது தெரிய வந்தது. கிணற்றின் உரிமையாளர், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றடிக்குச் சென்றுள்ளார். அப்போதுதான் தண்ணீரில் மிதந்த சடலங்களைப் பார்த்து, அக்கம்ப்பகத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊர்பொதுமக்களும் அந்த கிணற்றடிக்கு வந்து பார்த்தனர். கிணற்றில் சடலமாக மிதந்தது ஜெயாவின் குழந்தைகளான ஷாலினி மற்றும் 11 மாத கைக்குழந்தையான வெற்றிவேல் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் அவர்களும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்களும் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை மீட்க முயற்சிப்பதற்குள், அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் கிணற்றுக்குள் குதித்து, இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர்.
ஜெயா மற்றும் இன்னொரு குழந்தை ஷமிதாஸ்ரீ ஆகியோரின் சடலங்களும் கிணற்றுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கி தேடினர். நேற்று இரவு 9 மணியளவில், கிணற்றுக்குள் ஆழத்தில் கிடந்த ஜெயாவின் உடலை மீட்டனர். ஆனால் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டதால் குழந்தை ஷமிதாஸ்ரீயின் சடலத்தை மட்டும் மீட்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து பாதாள சங்கிலி போட்டு குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
மூன்று குழந்தைகள், ஜெயா ஆகியோரின் சடலங்களைப் பார்த்து அந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். இதையடுத்து, சடலங்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விசாரணையில், ஜெயாவுக்கும், அவருடைய கணவருக்கும் கடந்த சில நாள்களாக மனக்கசப்பு இருந்து வந்தது தெரிய வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, ஜெயாவின் செல்போனுக்கு 'ராங்-கால்' எனப்படும் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த ராங்&கால் நபருடன் ஜெயா முதல் அழைப்பிலேயே சிரித்துப் பேசியுள்ளார்.
அந்த முகம் அறியாத நபரின் செல்போன் நம்பரை பதிவு செய்து கொண்ட ஜெயா, அடிக்கடி அந்த நபருடன் பேசத்தொடங்கினார். லட்சுமணன் வேலைக்குச் சென்றதும் ராங்&கால் நபருடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இதையெல்லாம் தெரிந்து கொண்ட லட்சுமணன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பலமுறை பல நாள்கள் வரை பேசிக்கொள்ளாமலும் இருந்து வந்துள்ளனர். ஆனாலும் அந்த ராங்-கால் நபருடன் ஜெயா, விடிய விடிய செல்போனில் பேசுவதை தொடர்ந்துள்ளார்.
இது இப்படி இருக்க, கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்பு, கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், மர்ம நபர் ஒருவர் ஜெயாவை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அவனை அக்கம்பக்கத்தினர் பிடித்து விசாரித்துவிட்டு, எச்சரித்து அனுப்பிவிட்டனர். கிராம மக்களும் ஜெயாவின் நடத்தை குறித்து லட்சுமணன் காது படவே தகாத முறையில் பேசி வந்துள்ளனர். இதனால் மீண்டும் கணவன், மனைவிக்குள் பிரச்னை வெடித்தது.
இந்த நிலையில்தான் ஜெயாவும், அவருடைய மூன்று குழந்தைகளுடன் விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் மனம் உடைந்து ஜெயாவே குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், ஜெயாவுடன் அடிக்கடி செல்போனில் பேசி வரும் ராங்-கால் நபர் குறித்தும், ஜெயாவை பார்க்க வீட்டிக்கு வந்த மர்ம நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.