அண்மையில் புதியதாக தமிழக அரசு 5 மாவட்டங்களை உருவாக்கியது. அதில் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி உருவாவதற்கு முன் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள 49 பஞ்சாயத்துக்களும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
தற்போது கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரித்ததை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 49 பஞ்சாயத்துக்களில் இந்த 4 பஞ்சாயத்துகள் (டி.கொளத்தூர், சரவணபாக்கம்,பெரியசெவலை , ஆமூர்) மட்டுமே உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த 4 பஞ்சாயத்துகளை சேர்ந்த ஊர் பொதுமக்களும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் தாலுகா வேண்டும் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தாலுகா வேண்டாம் என்றும், மேலும் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம் வேண்டும், 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம் என்றும் விழுப்புரம் பிரிக்கப்பட்ட தேதியில் இருந்து இன்று வரை தங்களது எதிர்ப்புகளை கறுப்புக்கொடி போராட்டம் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதன் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.