கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள 'எரையூர் - அதையூர்' பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், எலவாசனூர்கோட்டை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் இறையூர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவரது மகன் ஜான் மெல்கியூர் என்பதும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைதும் செய்துள்ளனர். இப்பகுதியில், மான், மயில், காட்டுப்பன்றி உட்பட பல்வேறு வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. அவைகளை வேட்டையாட மர்ம நபர்கள் இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் வருவார்கள்.
அப்படிப்பட்டவர்களை வனத்துறை காவல்துறையினர் கைது செய்து வழக்குத் தொடரும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதேபோன்று வன வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கியோடு வந்த இளைஞர் குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.