ஆந்திராவில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நேற்று (29.062024) தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு. அத்தகைய வலிமையான தலைமையை இழந்ததனால்தான் இன்றைக்கு மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலையைத் தீ வைத்துச் சேதப்படுத்தியிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையைச் சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மாநில மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.