கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகள் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சுமார் 17 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. இதில் 17 ஆடுகளும் இறந்து விட்டன. இது செந்நாய் அல்லது காட்டு நரி போன்ற விலங்குகள் கடித்திருக்கலாம் என வனத்துறையினர் ஆலோசித்து வந்தனர்.
இறந்த ஆடுகளின் கழுத்தில் மட்டுமே காயம் இருப்பதால் சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்காக இருக்கலாம் என மக்கள் கூறினர். இதையடுத்து கள்ளக்குறிச்சி பகுதி வனத்துறையினர் அப்பகுதியில் நடமாடிய விலங்கின் காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். ஆனால் அதன் பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட வருவாய்த் துறையினரும் இந்த சம்பவம் பற்றி கண்டுகொள்ளவில்லை. இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தோட்டப்பாடி என்ற ஊரிலும், கூட்டுரோடு பகுதியிலும் சுமார் 14 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்ததாக தெரியவந்துள்ளது. அதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
கடந்த மூன்று மாதங்களாகவே சின்னசேலம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் கணியமூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சின்னசேலத்தில் இருந்து தனது ஊரான கணியமூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டுரோட்டு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகே பைக்கின் வெளிச்சத்தை கண்டு இரண்டு சிறுத்தை குட்டிகள் போன்ற விலங்குகள் ரோட்டை கடந்து பாய்ந்து ஓடி உள்ளது. இதைப்பார்த்து பயந்துபோன பெரியசாமி, பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து பொது மக்களிடம் கூறி, அந்த மர்ம விலங்குகள் நடமாடிய பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் சிறுத்தை குட்டிகள்செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், இது சிறுத்தை தானா அல்லது வேறு ஏதேனும் மர்ம விலங்கா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இனிமேலாவது வனத்துறையினர் வருவாய்த் துறையினர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்று வேண்டுகோள் வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.