சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
இதற்கிடையே தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்தச் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று (21.05.2024) இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில், “கோரமண்டல் ஆலையை மீண்டும் திறக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரைகள் மற்றும் தொழில் நுட்ப குழு பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும். இந்திய கடல்சார் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். தொழில் பாதுகாப்பு துறை மற்றும் பசுமை தீர்பாயத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற்றிட வேண்டும் அதன்படி ஆலையைத் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.