Skip to main content

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப் பணிகளுக்கு அனுமதி

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Permission for Chief Minister Project work in your constituency

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று (7.10.2023) நடைபெற்றது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி (07.05.2022) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்.110 இன் கீழ் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தினை அறிவித்தார். இது குறித்து முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 22.08.2022 அன்று எழுதிய கடிதத்தில், அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து 1896 பணிகளை அரசுக்குப் பரிந்துரை செய்தது.

 

பரிந்துரைக்கப்பட்ட பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அனைத்து துறைகளிடமிருந்தும் இது தொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்துச் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், 2023 - 24 ஆம் ஆண்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் பணிகள் என வகைப்படுத்தப்பட்டு அப்பணிகளுக்கு 8.9.2023 அன்று தலைமைச் செயலாளர் தலைமையிலான பணிகளைத் தேர்வு செய்யும் குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 788 பணிகள் ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. மேலும், 2024 - 25 ஆம் ஆண்டில் 203 பணிகள் ரூ.5,901 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன.

 

இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபால், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்