தென்காசி மாவட்டத்தில் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் கடந்த ஆண்டு கரோனா முதல் பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் நீராடத் தடை விதிக்கப்பட்டிருந்து. 8 மாதகால தடையின் காரணமாக குற்றாலம் வெறிச் சோடியதால் பயணிகள் வரத்து அறவே தடைபட்டதன் காரணமாக அதனை நம்பியுள்ள குற்றால நகர வியாபாரிகள் லாட்ஜ்கள் வாடின. மேலும் வியாபாரமில்லாமல் போனதால் வியாபாரிகள் லாட்ஜ் உரிமையாளர்கள் வேதனைப்பட்டனர்.
முதல் அலையின் காரணமாக டிசம்பர் 15ல் விதிக்கப்பட்ட தடை கரோனாத் தாக்கம் குறைந்ததின் காரணமாக ஏப்ரல்16ல் மீண்டும் சுற்றுலா பயணிகள் நீராட அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கரோனா இரண்டாம் கட்ட அலை வேகமெடுக்க மறுபடியும் அருவிகளில் நீராடத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் அலையின் தாக்கம் குறைந்ததின் காரணமாக, சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குற்றாலத்தில் மக்கள் நீராட அனுமதிக்க வேண்டும் என்ற வற்புறுத்தலுக்கு இணங்க தென்காசி மாவட்டக் கலெக்டர் டிச 20 முதல் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் நீராடலாம் என அறிவித்தார்.
டிச 20 அன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இரவு முதலே நீராடக் காத்திருந்தனர். ஏனெனில் தொற்றுப்பரவல் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீராடலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அன்றைய தினம் தென்காசி எம்.எல்.ஏ.வான பழனிநாடார் காலை குற்றால அருவிகளில் மலர் தூவி தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். அதிகாலையிலேயே 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திரண்டதால் குறைந்த அளவு போலீசாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சமூக இடைவெளி பின் பற்றப்படவில்லை. மெயின் அருவியில் ஆண்கள் 10 பேரும் பெண்கள் 6 பேர், ஐந்தருவியில் ஆண்கள் 10, பெண்கள் 10 பேர், மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சொல்லப்பட்டது, பின்பற்றப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் அறிவித்த கண்காணிப்புகுழுக்கள் ஒரு சில இடங்களில் தென்படவில்லை. அருவியில் தண்ணீர்வரத்து குறைவாக இருந்ததால் மக்கள் நெருக்கடித்து நீராடினர். தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் தான் அனுமதி என்பதும் காற்றில் பறக்கவிடப்பட்டது.