தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. பட்டாளம் பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தட்டாங்குளம் என்று அழைக்கப்படும் இந்த பகுதி ஆதி ஆந்திர தெலுங்கு பேசுகின்ற மக்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழ்கின்ற ஒரு பகுதியாகும். இந்த பகுதியினுடைய நீர்த்தேக்கம் என்பது காலகாலமாக இருந்து வருகின்ற ஒரு சூழல் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் கடந்த முறை தமிழக முதல்வர் ஆய்வுக்கு வருகின்ற பொழுது புதிதாக இங்கு ஒரு பம்பிங் ஸ்டேஷனை ஏற்படுத்தி 350 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டு நிரந்தரமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தண்ணீர் புரசைவாக்கம் தானா தெருவில் ஆரம்பித்து வந்து சேர்ந்து பின்னர் கேப்டன் காட்டன் வாயிலாக இந்த தண்ணீர் வெளியேறும். இது மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வுகாண தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த பருவமழை நின்றவுடன் ஐஐடி தொழில் வல்லுநர்களோடு இந்த பகுதியில் கலந்து ஆலோசிக்க முடிவெடுத்துள்ளோம். பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஒரு ஆர்ச் கல்வெட்டு ஒன்று அந்த பகுதியில் அமைந்திருக்கிறது. அந்த கல்வெட்டையே மீண்டும் தூர்வாரி சரி செய்வதா அல்லது தானா தெருவில் இருந்து இந்த மார்க்கமாக புதிய கல்வெட்டு அமைப்பதா என்பது குறித்து கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அடுத்த பருவமழைக்குள் அந்த பணிகளை முடித்து தண்ணீர் தேங்காமல் போகின்ற சூழலை ஏற்படுத்துவோம்'' என்றார்.