ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பெரியார் பல்கலைக்கழக 'நிரந்தர' பொறுப்புப் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திடீரென்று அவர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அரசுக்கு எதிராக அவர் வழக்குத் தொடர திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் பெரியார் பல்கலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புப் பதிவாளராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (60). கணிதம் படித்துவிட்டு, கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணியில் சேர்ந்தது; கணினித்துறைக்கு சாதாரண கணினிகளை வாங்கிவிட்டு, செயல்திறன் மிக்க கணினிகளை வாங்கியதாக போலி ரசீதுகள் மூலம் பல்கலை நிதியைச் சுரண்டியது, டி.டி.யு. திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்த வகையில் அவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகையை போலி டெபிட் கார்டுகள் மூலம் சுருட்டியது, அலுவலகத்திற்கு அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் பல்கலை நிதியை களவாடியது உள்பட அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனிசாமி, இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் தலைமையிலான குழு, 'நிரந்தர' பொறுப்புப் பதிவாளர் தங்கவேல் மீதான புகார்களை விசாரித்தது. இதில்தான் அவர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் விசாரணை அறிக்கையில், தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் 'மிகக் கடுமையானது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்கவேல், நடப்பு பிப்ரவரி மாதம் 29ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பிப். 7ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் துணைவேந்தர் ஜெகநாதனோ அவரை இப்போது வரை பணியிடைநீக்கம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும், பிப். 8ம் தேதி இரவு 8.45 மணி வரை தங்கவேல் தனது அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை 2000 பக்கங்களுக்கு மேல் நகலெடுத்துச் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு அடுத்தடுத்த நாள்களிலும் அதேபோல் துணைவேந்தரும், தங்கவேலும் ரகசியமாக சில ஆவணங்களை நகல் எடுத்துள்ளதாக பேராசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், அவர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் சந்தேகம் கிளப்பி உள்ளனர். தங்கவேலை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யக்கோரியும், அரசு உத்தரவை துணைவேந்தரே மதிக்காமல் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்தும் கல்லூரி ஆசிரியர்கள் கழகம், பெரியார் பல்கலை ஆசிரியர்கள சங்கம், அனைத்துப் பல்கலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் பறந்தன.
பல தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்தது ஒருபுறம் இருக்க, தங்கவேல், திடீரென்று பிப். 12ம் தேதி மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அவர் அனுப்பியுள்ள விடுப்புக் கடிதத்தில், முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால், பிப். 23ம் தேதி வரை 12 நாள்கள் மருத்துவ விடுப்பில் செல்வதாகவும், பணியில் சேரும்போது மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெரியார் பல்கலை பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ''துணைவேந்தர் ஜெகநாதன், நிரந்தர பொறுப்பு பதிவாளரான தங்கவேல் ஆகியோர் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு நெருக்கமான உறவினர்கள். இதற்கு முன்பு துணைவேந்தராக இருந்த குழந்தைவேலும் இவர்களின் உறவினர்தான். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்துதான் பெரியார் பல்கலையை பல வழிகளிலும் நாசம் செய்து விட்டனர்.
துணைவேந்தர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழக அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார். பிப். 13ம் தேதி பல்கலையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதேநாளில் ஆசிரியர் தொகுதியில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கும் தேர்தலை நடத்தினார். அந்த உறுப்பினரின் பதவிக்காலமே இன்னும் 3 மாதம்தான் உள்ளது. அதற்குள் தேர்தல் தேவையில்லாதது மட்டுமின்றி ஒரே நாளில் வழக்கமான சிண்டிகேட் கூட்டத்தையும், தேர்தலையும் வைக்கத் தேவையில்லை என்று பல ஆசிரியர் சங்கங்களும் போர்க்கொடி தூக்கின.
ஆனால் வழக்கம்போல் துணைவேந்தர் ஜெகநாதன், எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் தேர்தலை நடத்தி முடித்தார். மேலும், அரசு உத்தரவு போட்டது என்பதற்காக தங்கவேலை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பகிரங்கமாக கூறினார். பெரியார் பல்கலை வரலாற்றில் ஜெகநாதன் போன்ற தான்தோன்றித்தனமான துணைவேந்தரை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை'' என்கிறார்கள்.
மற்றொரு பேராசிரியர் கூறுகையில், ''மருத்துவ விடுப்பில் சென்றுள்ள தங்கவேல், பிப். 13ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்துள்ளார். மேலும், பதவிக்காலம் முடிந்த ஒருவருக்கு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதும் பல்கலை சாசன விதிகளுக்கு எதிரானது. அவர், அரசு உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை'' என்றார்.
மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் ஒளி விளக்காக விளங்க வேண்டிய பல்கலைக்கழகத்தை, துணைவேந்தரும், ஊழல் பதிவாளரும் கூட்டணி சேர்ந்து 'பல்கொலை'க்கழகமாக மாற்றி விட்டதாக பல தரப்பிலும் அதிருப்தி கிளம்பியுள்ளன.