அதிமுக ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சக்திவேல், கிருஷ்ணவேணி, கனிவண்ணன், செந்தில் குமார் ஆகியோர் ஊடகத்தில் பேசியதால், பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக, பல்கலைக்கழகம் மூலமாக கமிட்டி ஒன்றை அமைத்து அந்தக் கமிட்டிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி நல்லதம்பியை நியமித்து விசாரணையைத் தொடங்கினார்கள். அந்த விசாரணைக்கு பணியாளர்கள் ஆஜராகாத நிலையில், அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஏற்க மறுத்த பாதிக்கப்பட்ட நான்கு பணியாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கில் எங்களின் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போதே எங்களை பணிநீக்கம் செய்துள்ளனர். இது சட்டத்திற்குப் புறமானது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இவ்வழக்கின் விசாரணையில், நான்கு ஊழியர்களும் போராட்டத்தின் போது எந்த விதமான விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும், மீண்டும் பல்கலைக்கழகம் அதே கமிட்டியை அமைத்து 7 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த சூழ்நிலையில் அதே ஓய்வு பெற்ற நீதிபதி நல்லதம்பி அவர்களின் தலைமையில் மறுவிசாரணையைத் தொடங்கி விசாரித்ததில், நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் பல்கலைக்கழகத்தால் நிரூபிக்கப்படவில்லை எனத் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையை துணைவேந்தர் ஏற்க மறுத்து அந்த நான்கு பேரையும் பணியல் சேர்க்க மறுத்துவிட்டார். மேலும், இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் அந்த நான்கு பேரையும் பணியில் சேர்க்கச் சொல்லியும் துணைவேந்தர் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத் தலைவர் பாண்டியன் கூறுகையில், “அவர்களே நியமித்த கமிட்டி. அவர்களே நியமித்த நீதிபதி. ஆனால், அவர்கள் கொடுத்த அறிக்கையை எந்தக் காரணமும் சொல்லாமல் மறுப்பது என்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? உங்களுக்குச் சாதகமாகக் கொடுத்தால் ஏற்பதும், பாதகமாக வந்தால் எதிர்ப்பதும் என்பது எந்தவிதத்தில் நியாயமாகும்? இதனை உயர்கல்வித்துறையே தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் நோக்கம் என்ன?” என்ற கேள்விகளை எழுப்பினார்.
இது குறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, “இரு வேறு அறிக்கைகளைக் கொடுத்துள்ள நிலையில் தான் நாங்கள் அந்த அறிக்கையை மறுத்தோமே தவிர, வேறு காரணம் இல்லை.” என்றவரிடம், பழைய விசாரணையை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்று மறுவிசாரணை நடத்தினர். அது எப்படி இரு அறிக்கைகளாகும் எனக் கேள்வியை முன்வைத்தபோது பேச மறுத்து தொலைப்பேசியைத் துண்டித்துவிட்டார்.