மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்து கொண்ட, கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில், தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, ஆய்வுக் குழு சொன்னாலும், அதில் தமிழக அரசு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது. இதில் மீதமுள்ள 2.5 சதவீதம் இடங்களை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் கேட்டு வந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டால் கிராமப்புற மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 16 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இன்று (18-11-2020) முதல், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு, சென்னை நேரு அரங்கில் தொடங்கியுள்ளது. முதல் நாள் கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கீரமங்கலம் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு வாய்ப்பு
இந்தக் கலந்தாய்வில், கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அதில், கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் திவ்யா மற்றும் பிரசன்னா ஆகிய இரு மாணவிகளும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணிகா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதேபோல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஹரிகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன், மாரிமுத்து ஆகியோர் ஃபோனில் வாழ்த்து கூறினார்கள்.
இதில் 3 மாணவ, மாணவிகள் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை படித்து, தேசிய திறனாய்வுத் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் என்பதால் செரியலூர் கிராம இளைஞர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாணவன் ஹரிகரன்
மேலும் 8 மாணவ, மாணவிகள்
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்தாய்வில் கலந்து கொண்ட புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுகன்யா, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் அகஸ்தீஸ்வரன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியையும், சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கவிவர்மன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியையும், அரிமளம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், தாந்தாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கிருஷ்ணவேணி மற்றும் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரபாகரன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.
மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா மற்றும் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பவித்திரன் ஆகிய இருவருக்கும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், பணம் கட்டி படிக்க முடியாத சூழ்நிலையால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துள்ளனர். இந்நிலையில், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோர் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வாகி உள்ளதால், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வாகி உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் ஆகியோர் வாழ்த்துக் கூறினார்கள். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.
ஒரே ஊரில் இருந்து 5 மருத்துவர்களை கீரமங்கலம் அரசுப் பள்ளிகள் உருவாக்கி உள்ளது சாதனையாக உள்ளதாகக் கூறுகின்றனர்.