தந்தை பெரியாரின் 142- வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி காமராஜர் சாலையில் 5 டன் மணல் கொண்டு 9 அடி உயரத்தில் மணல் சிற்பம் 48 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் சிற்பக்கலை பயின்று, பெங்களூர் சித்ரகலா பரிஷத் கல்லூரியில் சிற்பக்கலையில் முதுகலைப்பட்டம் பெற்ற ஓவியர்-சிற்பி குபேந்திரன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கி பல்வேறு விருதுகளை வென்ற இவர், புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வீராம்பட்டினம் கடற்கரையில் பெரியாரின் உருவத்தை 5 டன் மணல் கொண்டும் 9 அடி உயரத்திலும் 20 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.
'நீட்' தேர்வால் தமிழ்நாட்டு பிள்ளைகள் உயிரிழப்பதை தடுத்திட ban neet, 'நீட்' தேர்வை தடுத்திடு, இந்தி திணிப்பை எதிர்த்திடும் வகையில் "இந்தி தெரியாது போடா" என்ற கருத்துகள் சிலையின் கீழ் பதியப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பம் நேற்று (17.09.2020) முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. பெரியாரின் பிறந்தநாளில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூக நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை அடியோடு அழிப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பெரியாரின் தேவை அகில இந்த அளவில் தேவைப்படுகிறது. கரோனா நெருக்கடியிலிருந்து மத்திய அரசு மக்களை காப்பாற்ற தவறிவிட்டது. பொருளாதாரத்தில் தவறான அணுகுமுறையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. பழைய வரிவிதிப்பு முறையை கொண்டுவர வேண்டும். ஜி.எஸ்.டி.யின் மாநில பங்கை மத்திய அரசு தரவில்லை, முறைப்படி வழங்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய பங்கை மத்திய அரசு சட்டப்படி வழங்க வேண்டும். நீட் தேர்வு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு முன் சிலர் இறந்துள்ளனர். தேர்வு முடிவுக்குப் பிறகு எத்தனை உயிரை பறிக்கும் என்று அச்சமாக உள்ளது. தமிழகம் - புதுச்சேரி மட்டுமல்லாது அகில இந்திய அளவில் நீட் தேர்வை கைவிட வேண்டும்" என்றார். மேலும் அவர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தைபோல புதுச்சேரி அரசும் இதை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.