பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வெளியானது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அளித்த 29 பக்க தீர்ப்பு நகல் வெளியானது. அதில், அமைச்சரவைப் பரிந்துரை மீது இரண்டரை ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காததை ஏற்க முடியாது. பேரறிவாளன் இதுவரை பெற்ற தண்டனையை முழுமையாக அனுபவித்ததாக கருதி அவரை விடுதலை செய்கிறோம். பேரறிவாளன் ஜாமீன் தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன.
நீண்ட நாள் சிறைவாசம், நன்னடத்தை உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் விடுதலை. ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடியவர் தான். அமைச்சரவையின் பரிந்துரையை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது. அமைச்சரவை முடிவின் மீது ஆளுநர் தாமதம் செய்தால் அது நீதித்துறை ஆய்வுக்குள் வந்துவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிணையில் இருந்த பேரறிவாளன் முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் செய்யப்பட்டு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். சிறை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.