பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆளுநர் உரிய முடிவை எடுக்கலாம் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிய நிலையிலும் இதுதொடர்பாக முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (07.12.2021) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழக ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால் அவர் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை" என்று வாதிட்டார். அதை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆளுநரின் கால தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.