வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வழியாக வியாழக்கிழமை (நவ. 7) இரவு 10 மணியளவில் ஒரு மர்ம கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் முன்பக்கமும், பின்பக்கத்திலும் வேறு வேறு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருந்து.
அந்தப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர், காரில் பொருத்தப்பட்டிருந்த போலி நம்பர் பிளேட்டை கவனித்து விட்டனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அந்த காரை துரத்தத் தொடங்கினர்.
இதுகுறித்து மத்தூர் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், கன்னந்தள்ளி பகுதியில் முதல்நிலை காவலர் செல்வம் மற்றும் காவல்துறையினர் தடுப்பு கம்பிகளை அமைத்தனர். அந்த வழியாக வந்த மர்ம கார், தடுப்புக்கம்பிகளை இடித்துத் தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தது. முதல்நிலைக் காவலர் செல்வம் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட காவல்துறையினர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாம்பல்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாம்பல்பட்டி ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழ், சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி தடுப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வழியாக சென்ற மர்ம கார், லாரி தடுப்புகளைக் கடந்து மேற்கொண்டு செல்ல முடியாததால் அங்கேயே நின்றது.
அதற்குள் அங்கு விரைந்த காவல்துறையினர் மர்ம காரை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். திருப்பத்தூர் அண்ணாநகரை சேர்ந்த அருண் (28) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அந்த காரில் இருப்பது தெரிய வந்தது.
காருக்குள் ஒரு மூட்டையில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும், திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு அந்த அரிசியை கடத்திச்செல்வதும் தெரிய வந்தது. காவல்துறையினர் துரத்தி வந்ததால் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், காரை வேகமாக ஓட்டிச்சென்றதாக அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேறு வேறு நம்பர் பிளேட், வேகமாக சென்ற மர்ம கார் என ஏதோ பெரிய அளவில் கடத்தல் பொருளோ அல்லது பெருங்குற்றச் சம்பவமாகவோ இருக்கலாம் எனக் கருதிய காவல்துறையினருக்கு, வெறும் 800 கிலோ ரேஷன் அரிசிதான் என்பதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.