பெரம்பலூர் அருகே மாமூல் தர மறுத்த மருந்தக உரிமையாளர் ரவுடிகளால் கொலை செய்யபட்ட சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம் சிவன்கொவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்த நான்குபேர் கொண்ட ரவுடி கும்பல், அடிக்கடி நாகராஜனை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறது. கடந்த மூன்றாம் தேதி மாலை 5 மணிக்கு மருந்தகத்திற்கு சென்று நாகராஜனை மிரட்டி மாமூல் கேட்டிருக்கிறது அந்த கும்பல். அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த நாகராஜன் ரூ.150 மட்டும் கொடுத்துள்ளார். அதை பெற்றுச் சென்ற கும்பல், அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் நாகராஜனிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால், நாகராஜன் மாமூல் தர மறுத்து விட்டார். அத்துடன் மனஉளைச்சல் அடைந்த நாகராஜன் இதுகுறித்து ரவுடிக்கும்பலை சேர்ந்த ஒருவரின் தந்தையிடம் இதுகுறித்து புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பல் நாகராஜனை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த நாகராஜன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜனின் மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், ரகு ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் அஜித் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.