பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் சீமான் என்பவரது அரிசி ஆலையில், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் வேலை பார்த்து வந்தார். அப்போது, சீமானின் மகள் செல்வராணிக்கும், பாண்டியனின் தம்பி செல்லதுரைக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் 1994ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினர். 1995ல் சென்னை ஐகோர்ட்டில் சீமான், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இதனையடுத்து ஐகோர்ட் உத்தரவின்பேரில், அப்போதைய குன்னம் இன்ஸ்பெக்டர் (பொ) காந்தி, போலீசார் ரவி, சின்னதுரை, அன்பரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அவர்களை தேடிவந்தனர்.
அவர்கள் குறித்து விசாரிக்க, பாண்டியனை தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர். மறுநாள் காலை கோவிந்தராஜபட்டினம் ஓடை அருகே மரத்தில் பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி அஞ்சலை புகார் அளித்தார்.
இந்த வழக்கை கடந்த 19 ஆண்டுகளாக தனிப்படை போலீஸ் மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் இறுதியில் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டார் என்று சி.பி.சி.ஐ.டி வழக்கை முடித்தது.
இந்த நிலையில் 2013ல் சென்னை ஐகோர்ட்டில் அஞ்சலை சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, மதுரை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக இருந்த சி.கே.காந்தி, திருச்சி விமான நிலைய இமிகிரேசன் எஸ்ஐ ரவி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸ் கான்ஸ்டபிள்களான சின்னத்துரை, சீமான், சுப்ரமணியன், பாலசுப்ரமணி உள்ளிட்ட 6 பேர் சேர்த்து கொலை வழக்காக மாற்றி விசாரிந்தனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏசி காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குக்கான விசாரணை திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் 2013 ம் ஆண்டு விசாரணை நடத்தியது. சிபிஐ தரப்பில் டிஐஜி செங்கதிரவன் தலைமையில் நீதிமன்றத்தில் 60 சாட்சிகளை கூண்டில் ஏற்றி விசாரித்தார். உதவி ஆணையர் சி.கே. காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் தனிஸ்லாஸ், அகஸ்டின், ராமகுமார், கோகுலதாஸ் வசந்த். வாதடினார்கள். இன்று மாலை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் .உதவி ஆணையர் காந்தி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றம் நிரூபிக்கபடவில்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டனர் என்று தீர்ப்பு வாசித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து பேசிய, சி.கே. காந்தி, இந்த வழக்கு 19 ஆண்டுகள் கழித்து சி.பி.ஐ.டி விசாரணையில் தற்கொலை என்று அறிக்கை கொடுத்தது. அதன் பிறகு இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த சி.பி.ஐ. கொலை வழக்காக மாற்றி கிட்டதட்ட 5 ஆண்டுகள் நீண்ட சட்ட போராட்டத்திற்கு விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன் என்றார்.