2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்வானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பல லட்சம் பேர் தேர்வு எழுதி லட்சத்தில் ஒருத்தராக நீங்கள் எல்லாம் தேர்வாகி வந்திருக்கிறீர்கள். இப்படி லட்சத்தில் ஒருத்தராக இருக்கக்கூடிய உங்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக மட்டும் தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும். மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி. அந்த வகையில் அரசாங்கம் தீட்டுகின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அது மக்கள் நன்மைக்காகத்தான். அரசின் திட்டங்களையும் பல்வேறு சேவைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய மிக முக்கியமான பணியை நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய எல்லோரையும் நான் பாராட்டுகிறேன். நீங்கள் எல்லோரும் அரசு ஊழியர்களாக ஆகி இருக்கிறீர்கள். அரசு ஊழியர்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காக வாழ்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த மேடையிலேயே நான் சொல்லியாக வேண்டும். கடந்த சனிக்கிழமை 23ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அதாவது இறக்கும் முன்பு உடல் உறுப்புகளை தானம் வழங்குபவர்களுடைய இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதையோடு மேற்கொள்ளப்படும் என்று சொல்லி இருந்தேன். மனிதநேயமிக்க உடல் உறுப்பு தானம் செய்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் ஒரு அரசு ஊழியர் தான்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் மூளைச்சாவடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேல் உடைய உடல் நேற்று அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இறுதிச் சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். வடிவேல் உடைய உடல் உறுப்புகளை தானமாக பெற்ற குடும்பங்களின் சார்பாக மட்டும் அல்ல அவருடைய குடும்பத்தினருக்கு தனிப்பட்ட என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செய்தி உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த வகையில் அரசு ஊழியராக பணியாற்றிய வடிவேல் காலத்திற்கும் மக்களால் நினைவு கூறப்படுவார். ஒரு இயந்திரம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகமும் பழுது இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். அதுபோலத்தான் அரசு என்ற மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியர்களாகிய நீங்களும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்'' என்றார்.