"பட்ட காலிலேபடும், கெட்ட குடியே கெடும் ."என்கிற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சரியாகவே பொருந்தும்.
ஆரம்பகாலத்தில் பெரும் வெள்ள பாதிப்பு, பிறகு வறட்சி என மாறி மாறி அவர்களுடைய வாழ்வாதாரமே சிதைந்து வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்தநிலையில், ஒவ்வொரு ஏரியாவிற்கும் ஒவ்வொரு அபாயகரமான திடங்களான பெட்ரோகெமிக்கல் மண்டலம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன்திட்டம், ஷேல் காஸ்திட்டம் என விதவிதமான அபாயகரதிட்டங்களை புகுத்தி விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் நசுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது மத்திய,மாநில அரசுகள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, தஞ்சை நாகை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வருகிறது. மூன்று போகம் விளைவிக்கப்பட்டு வந்த நெல் சாகுபடி ,தற்போது ஒருபோகமாக சுருங்கிவிட்டது. இந்த நிலையில் ஒட்டுமொத்த டெல்டாவிற்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் என்கிற பெயரில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஸ்டெர்லைட் புகழான வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதனை கண்டித்து திருக்காரவாசலில் தொடர் போராட்டம் நடந்தநிலையில் கரியாப்பட்டினத்திலும் போராட்டம் மூன்றாம் தேதி முதல் நடந்துவருகிறது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சரவணமுத்து, கோவிந்தராஜ், நடராஜன் ,ரமேஷ், அகிலன், குமார் பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட ஏழு பேர் மீதுவழக்குப்பதிவு செய்து கைது செய்து வேதாரன்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, திருச்சியில் அடைத்துள்ளனர்.
இதனை கண்டித்து ஏராளமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் பழனியப்பர் அய்யனார் கோவிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் வீரியமடையும் என்பதால் காவல் துறையினரை வீதிக்கு வீதி குவித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர் காவல்துறையினர்.
திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க அங்குவந்தனர். அவர்களை காவல்துறையினர் குறுக்கே வாகனத்தை நிறுத்தி தடுத்துள்ளனர். அப்போது வழக்கறிஞர் காசிநாதபாரதிக்கும் காவல்துறைக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது" அடிக்கிற வெயிலில் காக்கிகளுக்கு கண் தெரியவில்லை போல, யாரை மறிக்கிறோம்னு தெரியாம மறிக்கிறாங்க" என நக்களடித்தனர். அதேபோல் வழக்கறிஞர் பாரிபாலன் "காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்கா, அரசியல்வாதிகளுக்கா. மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் ." என்றும் சகட்டு மேனிக்கு திட்டி சட்ட ரீதியாக நாங்கள் செல்வோம் என்று மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் சென்று ஆதரவு கொடுத்தனர்.
கோடைவெயிலும், நாடாளுமன்றத்தேர்தலின் அனலும் வேதாரன்யம் தாலுகாவை சூடாக்கியிருக்கும் நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் அனலாக பற்றி எரியத் துவங்கியிருப்பது ஆளும் அரசுக்கு கிளியை உண்டாக்கியுள்ளது.