முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் 08/12/2021 பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று அவர் பெங்களூரில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள விபத்து நடந்த பகுதியான காட்டேரி பள்ளத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சைலேந்திரபாபு, ''இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நஞ்சப்பன்சத்திரம் மக்கள் நமது காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக முதல்வருக்கு இந்த தகவலைத் தெரிவித்தோம். உடனே அவர் என்னை வீட்டிற்கு அழைத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி 12.25 மணிக்கே குன்னூர் காவல்நிலைய அதிகாரிகள் குறிப்பாக சிவா, பிரிதிவ்ராஜ், டிஎஸ்பி சசி, ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சப்பசத்திரம் மக்களுடன் சேர்ந்து மூன்றுபேரை உயிருடன் மீட்டு உடனடியாக அனுப்பினர்.
அதிக தீ எரிந்துகொண்டிருந்த நிலையில் அந்த பகுதி மக்கள் வீட்டில் உள்ள ஜமுக்காளம், பெட்ஷீட் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். அதற்காக நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 26 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எப்பொழுது முப்படை தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்த சந்தேகமும் கிடையாது'' என்றார்.
முன்னதாக போர்வை கம்பளி கொடுத்து மீட்புப் பணிக்கு உதவிய அப்பகுதி மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கம்பளி கொடுத்து நன்றி தெரிவித்தார்.