பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரண்டு சிறுவர்களை கைது செய்ததோடு, இதுபோன்று மாவட்டம் முழுவதும் சிறுவர்களை கொண்டு கஞ்சா விற்பனை செய்துவரும் சுரேஷ் என்பவனையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இராமநாதபுரத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்களுக்கு, சிறார்கள் மூலமாக கஞ்சா விற்கப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து இதுகுறித்து ரகசியமாக கண்காணிக்குமாறு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இராமநாதபுரம் ஓம் சக்தி நகர் 5-வது தெருவில் இரண்டு சிறார்கள் ஸ்கூட்டியில் கஞ்சா விற்பதாக வந்த புகாரை அடுத்து, கேணிக்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ரகசியமாக சென்றனர். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இரண்டு சிறுவர்களை பிடித்து, அவர்கள் கையிலிருந்த பையை சோதனை செய்தபோது, சிறுவர்களின் பைக்குள் 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த இரண்டு சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் இருவரும் இராமநாதபுரத்திலுள்ள ஒரு பள்ளியில் 9 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் அவர்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி அவர்களுக்கு தினமும் 200 ரூபாய் கூலியென்ற அடிப்படையில் கஞ்சா பொட்டலங்களை கொடுத்து விற்றுவருமாறு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவன் கொடுத்ததாகவும் கூறினர்.
முத்துவை கைது செய்த போலீசார் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் முத்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாகவும், அவனுக்கு ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் கஞ்சா சப்ளை செய்வதாகவும் ஒத்துக்கொண்டான். அவனை கைது செய்து சிறையிலடைத்த போலீசார் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான சுரேஷை தேடிவருகின்றனர். மேலும் சுரேஷ் மீது கேணிக்கரை காவல்நிலையம் உட்பட ஏராளமான காவல்நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.