Skip to main content

மருந்துகளை அதிக விலைக்கு விற்பதற்காக மருத்துவர்களுக்கு இளம்பெண்கள்! -மருந்து நிறுவனங்கள் குறித்து உயர் நீதிமன்றம் வேதனை!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020


மருந்துப் பொருட்களை அதிகவிலைக்கு விற்பனை செய்வதற்காக மருந்து விற்பனை நிறுவனங்கள், இளம் பெண்களையும் மருத்துவர்களுடன் அனுப்பிவைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும்,  மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதாக எத்தனை மருத்துவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வரி செலுத்துவது தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மருந்து நிறுவனம் தாக்கல் செய்த   மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், சுமார் 130 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில்  தினமும் 50 மில்லியன் நோயாளிகளுக்கு 1 மில்லியன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நவீன மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்கி வருவதால், வெளிநாடுகளில் இருந்தும்  இந்தியாவுக்கு, குறிப்பாக சென்னைக்கு மருத்துவச் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். ஆனால்,  தரமான மருத்துவ சிகிச்சை  குறைந்த செலவில் இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடைவது கிடையாது என்பது பெரும் குறையாக உள்ளது. 

உலகளவில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள் 33 மில்லியன் டாலர் மதிப்பில் இயங்கி வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதுபோல,  கடந்த 2017- ஆம் ஆண்டில் ரூ. 1,16,389 கோடிகளாக இருந்துள்ள மருந்து நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம்,  2018 -ஆம் ஆண்டில்  ரூ.1,29,015 கோடிகளாக  உயர்ந்துள்ளது. ஆனால்,  இந்த மருந்து நிறுவனங்களின் தேவையில்லாத மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக டாக்டர்களுக்கு தங்க நகை, ரொக்கப்பணம், கிரடிட் கார்டு, இன்பச்சுற்றுலா என பல வழிகளில் லஞ்சம் வழங்கப்பட்டு வருவதாக ஒரு நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதனால் டாக்டர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.  

இதே ரீதியில்,  எக்ஸ்ரே, இசிஜி என ஆய்வுக்கூடங்கள் மூலமாகவும் அதிகளவில் டாக்டர்களுக்கு கமிஷன் செல்கிறது. ஆனால்,  இவ்வாறு தொழில் நடத்தை விதிகளை மீறி டாக்டர்கள் எந்தவொரு அன்பளிப்போ அல்லது லஞ்சமோ மருந்து நிறுவனங்களிடம் பெறக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. அந்த நடத்தை விதிகள் தொடர்ந்து மீறப்பட்டே வருகின்றன. சிலநேரங்களில்,  டாக்டர்களுக்கு அவர்கள் விரும்பும் இளம்பெண்கள் கூட  மருந்து விற்பனை நிறுவனங்களால் பரிசாக அளிக்கப்படுகின்றனர். திரைமறைவில் நடந்து வரும் இந்த மருத்துவ மாபியாவால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தமட்டில்,  மருந்து விற்பனைக்காகப் பல வழிகளில் லட்சக்கணக்கில் செலவழித்த தொகையை,  தாங்கள் ஈட்டிய வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என நிறுவனம் கோருவது அதிர்ச்சிகரமாக உள்ளது. இவ்வாறு மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்வது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. 

எனவே கடந்த 5 ஆண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்க தங்க நகை, கிரடிட் கார்டு, ரொக்கப்பணம் என பல வழிகளில் லஞ்சம் பெற்ற டாக்டர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இந்நிறுவனம், தங்களின் மருந்து விற்பனைக்காக மருத்துவர்களின் விருந்தோம்பலுக்காக  செலவழித்ததாகக் கூறப்படும் ரூ.42,81,986 கோடி தொழில் நடத்தை விதிகளை மீறி லஞ்சமாகப் பெற்ற டாக்டர்கள் யார்?  அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மருத்துவ விதிகளை மீறி லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?   என்பது உள்ளிட்ட 12 கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள்,  இது  குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர், மருந்து பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு,  விசாரணையை வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்