இந்து ஆதியன் இனமக்களுக்கு சலுகைகளை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கும், ‘ஜெய் பீம்’ திரைப்பட நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொட்டடித்து நன்றி தெரிவித்தனர் நாகை மாவட்ட பழங்குடியின மக்கள். இருளர் இனம் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சனையை ஆழமாகப் பேசி, உலக அளவில் விவாதிக்கச் செய்யும்படி வெளியானது ‘ஜெய் பீம்’ திரைப்படம். பலதரபட்ட மக்களையும் பேசவைத்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்து கலங்கிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வருகின்ற 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசிகள் அனைத்தும் கிடைக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சாதிச் சான்றிதழை வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில், பழங்குடியின மக்களின் வலிகளை உணர்ந்து, அடிப்படை தேவைகள் கிடைக்க அதிரடியாக உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நாகை அவுரி திடலில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வழக்கமாக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம், பாராட்டு விழாக்களைக் கண்ட அவுரித்திடல் பழங்குடி மக்களை சுமந்திருந்தது. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கூட்டத்தில், செல்லூர், பொறக்குடி, நீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தவறாமல் வந்திருந்தனர். விழாவில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொட்டடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்தவர்கள் எல்லோரும் அம்பேத்கர், தமிழ்நாடு முதல்வர், நடிகர் சூர்யா ஆகியோரின் பதாகைகளை ஆர்வத்தோடு தூக்கிப்பிடித்து பழங்குடியின மக்களின் உரிமைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவந்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.