கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகில் உள்ள தொழுதூர் வழியாக நேற்று, அதிக அளவு கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மற்றும் டிராக்டர் ஆகியவற்றை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், ‘லாரி மற்றும் டிராக்டர்களில் மிக அதிக உயரமான அளவுக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சொல்கிறார்கள். அப்படி செல்லும் வாகனங்கள், மின்சார லைனிலில் உரசி மின் தடை மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இன்று (3ஆம் தேதி) மதியம் அப்படி வந்த லாரி ஒன்று, வீடுகளுக்கு செல்லும் மின்சார கம்பிகளில் உரசியது. இதனால், மூன்று வீடுகளுக்கு செல்லும் மின் வயர்கள் அறுந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது.
இதுபோன்ற விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அது சரி செய்யப்படுவதில்லை. மேலும் காவல்துறையினர் விபத்து நடந்த பிறகு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். அதற்கு பதில், சாலைகளில் இதுபோல் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை முன்கூட்டியே அனுமதிக்காமல் இருந்தால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.