அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 5000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் திருமழபாடியில் சித்த மருத்துவத்துடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே திருமழபாடியில் சித்த மருத்துவமனை சிறப்பாக இயங்கி வந்தது.
பிறகு காலப்போக்கில் சித்தமருத்துவர் புள்ளம்பாடிக்கு மாற்றப்பட்டார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பஞ்சாயத்து சார்பில் இடம் வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற தகவலையும் கேட்டுக்கொண்டதோடு கிராம மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் அவர் பொதுமக்களிடம், அமைச்சரவை கூட்டத்தில் இந்த கோரிக்கை குறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக திட்டப்பணிகள் துவங்கும் எனவும் கூறியதால், கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளதாக மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டத்தால் செம்பியக்குடி, குலமாணிக்கம், இலந்தைக்கூடம், கண்டராதித்தம், மேட்டுத்தெரு, அரண்மனைக்குறிச்சி, பாளையபாடி கோவில், எசனை விளாகம் உள்ளிட்ட 15 கிராம மக்கள் பயனடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.