
கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரி டி.ஐ.நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார் அளிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களை முறையாக கையாண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்ச வரம்பை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் தமிழக அரசு, கருணையுடன் பரிசீலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.