தமிழ்நாட்டில் ஊடகத் துறையிலும், பத்திரிகைத்துறையிலும் நிறைய பேர் வேலை பார்த்தாலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் அக்ரெடிடேசன் எனப்படும் அங்கீகார அட்டை பெற்றவர்கள் மட்டுமே, அரசின் சலுகைகளைப் பெற முடியும். அதாவது, வீட்டுமனை, மருத்துவ நிதியுதவி, பஸ்-பாஸ் மற்றும் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளைப் பெற முடியும். இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,144 பேர் அங்கீகார அட்டை வைத்துள்ளனர். ஆனால், இப்போது அங்கீகார அட்டை பெற்றும் பலன் இல்லை என்று புலம்புகின்றனர் சில பத்திரிகையாளர்கள்.
இதுகுறித்தும் நம்மிடம் ஆதங்கத்தைக் கொட்டிய பத்திரிகை நண்பர்கள். ”முன்பு கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது, அரசின் அங்கீகார அட்டை வைத்திருக்கும் அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில், அந்தந்த போக்குவரத்து கோட்டங்கள் வாயிலாக பஸ்-பாஸ் வழங்கப்படும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில், இந்த பஸ்-பாஸ் பெறுவதில், கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
அதாவது, ஆளும்கட்சிக்கு சாதகமான ஊடகங்களில் பணிபுரிபவர்களில், அக்ரெடிடேசன் கார்டு பெற்ற அனைவருக்கும் பஸ்-பாஸ் வழங்கப்பட்டது. மற்ற நிறுவனங்களில் பஸ்-பாஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது, மற்ற ஊடகத்திற்கு மொத்தம் 10 அங்கீகார அட்டை வழங்கினால், அதில் 3 அல்லது 4 பேருக்கு மட்டுமே பஸ்-பாஸ் என்ற நடைமுறை, இதற்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
அந்த 3 அல்லது 4 பேர் ஒவ்வொரு ஆண்டும், இப்போது வரை பஸ்-பாஸை புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர். அங்கீகார அட்டை பெற்ற மற்றவர்கள் ஒவ்வொரு முறையும் சென்னை எம்.டி.சி அலுவலகத்தில் பஸ்-பாஸுக்கு அப்ளை பண்ணினால், ஏற்கனவே பழைய பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே பஸ் -பாஸ் என்று கறாராகக் கூறி, விண்ணப்பத்தை நிராகரித்து விடுகின்றனர். விழுப்புரம் கோட்டத்திற்கான பஸ்-பாஸ் பெறுவதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுவதால், உண்மையிலேயே பெரும்பாலான செய்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். உங்களுக்கு 3 பாஸ் தான், அந்த 3 பேர் யாரென்று நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், நம்மிடையே சண்டை மூட்டிவிடுகின்றனர்.
இப்போது, திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. இந்தத் தடவை நடைமுறை மாறும் என்று நினைத்தால், அதே கதைதான் தொடர்கிறது. அக்ரெடிடேசன் கார்டு பெறுவதே, அரசாங்கத்தின் சலுகைகளுக்குத்தான். அதுகூட புரியாமல் செய்தித் துறை அதிகாரிகளும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஏன் இந்தக் கட்டுப்பாடு விதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை?” எனப் புலம்பினார் அந்த நண்பர்.
மற்றொரு செய்தியாளரோ, ”மாவட்டங்களைப் பொறுத்தவரை பி.ஆர். ஓ மூலம், அந்தந்த கோட்டத்திற்கான பஸ்-பாஸ் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும்.
சென்னையில் மட்டும்தான் கட்டுப்பாடு என்ற பெயரில் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் பஸ்-பாஸை பயன்படுத்தி ஊர் சுற்றப்போவதில்லை. அவர்கள் பணிநிமித்தமாக செல்லும்போது, பஸ்-பாஸ் உதவிகரமாக இருக்கும். அதுகூட இந்த அதிகாரிகளுக்குப் புரியவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.
பலூனை ஊதிக் கொடுத்தது முதலமைச்சர்தான்! பத்திரிகையாளர்கள், அதைப் பயன்படுத்த முடியாமல் ஊசியால் குத்தி உடைத்து விசனப்படுத்துகிறார்களே!