சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இருமுறை ஆருத்ரா, மற்றும் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் தேர் கீழவீதியில் காலையில் புறப்பட்டு தெற்கு வீதி ,மேலவீதி கஞ்சிதொட்டி முனைக்கு மதியம் 1 மணிக்கு வந்து நின்றுவிடும். சிவகாமிஅம்மன் பருவதராஜகுல சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாலை 4 மணிக்கு சிதம்பரம் நகர பருவத ராஜகுல சமுதாய மக்கள் சீர்வரிசை கொடுத்தபிறகு தான் தேர் கஞ்சிதொட்டி முனையிலிருந்து புறப்பட்டு மீண்டும் நிலைக்குச் செல்லும். இந்த ஐதீக நிகழ்வு பல நூறு ஆண்டு காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன தேர் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர பருவதராஜகுல சமுதாய மக்கள் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து 43 வகையான சீர்வரிசை பொருட்களுடன் கஞ்சி தொட்டி முனையில் தேர் நிற்கும் இடத்திற்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர் அங்கு தேரிலிருந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு இவர்கள் எடுத்துச்சென்ற சீர்வரிசை பொருட்களை அளித்துப் பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நியூ மூர்த்தி கபே உரிமையாளர் மோகன் சிபில், விக்னேஷ், செல்வ விநாயகர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகம், அறங்காவலர்கள் கட்டபொம்மன், பிரபாகரன், புதுச்சேரி எம்பி ராமதாஸ், சிதம்பரம் வி.ஆர். டெக்ஸ் உரிமையாளர் இளங்கோவன், மீனவ சங்க மாநில துணை தலைவர் கனகசபை, ஏ.ஜி.ஆர். கோவிந்தராஜ் கடலூர் வழக்கறிஞர் சிவராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், எடப்பாடி கிராம பருவதராஜகுல சமுதாய மக்கள், பக்தர்கள் சிதம்பரம் பருவத ராஜகுல சமுதாய மக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு திருத் தேரில் அமர்ந்திருக்கும் நடராஜரை தரிசனம் செய்தனர்.