விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட உச்சிக்கோவில் பகுதியில் 4வது தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் (06-11-23) இரவு வழக்கத்திற்கு மாறாக இந்த தெருவில் வசித்த வரும் மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு தூங்கச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வாசல் தெளிப்பதற்காக பெண்கள் எழுந்து வந்து வீட்டில் வாசலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த தெருவில் இருக்கும் பெரும்பாலான வீட்டின் வாசல்களில் ஆங்காங்கே ரத்தத் துளிகள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு வீட்டில் ‘பி.ஆர். இன்று இரவு’ என்று ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால், பீதியடைந்த அப்பகுதி மக்கள் ஒரு இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து, அங்கு இருந்த ரத்த துளிகளை எடுத்து அது மனித ரத்தமா? அல்லது ஆட்டு ரத்தமா? என்பதைக் கண்டறிய பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5வது தெருவில் இதுபோல் வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.