வேலூர் மாநகராட்சி 40து வார்டுக்கு உட்பட்ட கஸ்பா சித்தத்தா நகரில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுறது. இதனால் அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து குடங்களில் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் தண்ணீர் தர நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் இன்று காலை 7 மணியளவில் வேலூரிலிருந்து- சதுப்பேரிக்கு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள், “காசு கொடுத்து குடிநீர் வாங்கி வருகிறோம். ஒரு மாதமாக இப்படி காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வருகிறோம். இன்னும் எத்தனை நாளைக்கு தான் தண்ணீர் வாங்குவது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர் மாநகர மேயராக இருப்பது ஒரு பெண் தானே? மேயர் சுஜாதாவும் ஒரு குடும்பப் பெண் தானே, குடும்பத் தலைவியான அவருக்கு பெண்கள் தண்ணீர் இல்லாமல் எப்படி சமைப்பார்கள், வீட்டில் இருப்பவர்கள் எப்படி தண்ணீர் குடிப்பார்கள் என அவருக்கு எப்படி தெரியாமல் போனது? எங்களுடைய கஷ்டம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களைப் பற்றி அவருக்கு கவலைப்பட நேரமில்லை போல. எங்களுக்கு உடனே குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்” என்றனர்.
இதையடுத்து குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசிநடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உறுதியளித்ததை அடுத்து மறியலைப் பொதுமக்கள் கைவிட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக அங்கு 2 மணிநேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.