58ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை கோரி விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதிமுக அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

58ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் 58 கால்வாய் பாசன விவசாயிகள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டியும் நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தியும் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் விருவீடு பகுதி கிராமங்கள் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. விவசாயிகள் சாலையில் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக விவசாயி சக்திவேல் கூறும்போது, "1996 ஆம் ஆண்டின் போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தலைவர் கலைஞர் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வல்லரசின் கோரிக்கையை ஏற்று 58 கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தார். ஆசியாவின் மிக நீளமான தொங்கு பாலமாக கருதப்படும் 58ம் கால்வாயை கட்டி முடித்து சாதனை படைத்தார்.
கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே 58ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாமல் அதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து வண்ணமிருக்கிறது. விவசாயிகளின் நீண்ட போராட்டத்துக்கு இடையே கடந்த ஆண்டு கால்வாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது, விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட நிரந்தர அரசாணை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபகின்றனர்" என்று கூறினார்.