அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான டிக்கெட்டை பெண் ஒருவர் தவறவிட்ட நிலையில் அபராதம் கட்ட சொன்ன டிக்கெட் பரிசோதகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற R12 என்ற அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் அன்பழகன் என்பவர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது பேருந்தில் பயணித்த பெண் பயணியான சித்ரா தனக்கு கொடுக்கப்பட்ட பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான டிக்கெட்டை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என சொல்லி டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணை பேருந்திலிருந்து கீழே இறக்கியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் அபராதம் கட்ட வலியுறுத்தியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் பெண்களுக்கு இலவசம் தானே அதனால் டிக்கெட்டை தொலைத்தால் அபராதம் கட்ட வேண்டுமா என டிக்கெட் பரிசோதகர் அன்பழகனிடம் கேட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் டிக்கெட் பரிசோதகர் அன்பழகனை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டு சேலம் கோட்ட பொதுமேலாளர் லட்சுமணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.