மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெற்ற காலத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரையில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், மதுரை வழியாக 109/110 எண் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. மெயின் லைன் என்று அழைக்கப்படும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்த ரயில் இது.
மக்களின் மனங்களில் நிறைந்த நினைவுகளை கொண்ட இந்த ரயில், அகல ரயில் பாதை திட்டம் காரணமாக நிறுத்தப்பட்டது. துரதிருஷ்டவசமாக இந்த ரயில் தற்போது மயிலாடுதுறை செங்கோட்டை இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் மயிலாடுதுறையோடு நிறுத்தப்பட்டு விடுவதால் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட பயணிகள் இதைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், தென்காசி மாவட்டப் பயணிகளும் சென்னை செல்ல முடியவில்லை.
மீட்டர் கேஜ் காலத்தில் சென்னை வரை இயங்கி வந்த ரயில் தற்போது மயிலாடுதுறையோடு நிறுத்தப்படுவதால் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்... எனவே இந்த ரயிலை மீண்டும் தாம்பரம் முனையத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் மயிலாடுதுறை, கடலூர், விருதுநகர், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் மயிலாடுதுறை & கடலூர் வழியாக பகல் நேரத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் நிரம்பிய நிலையில் தான் தினமும் செல்கிறது. மேலும் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை பகுதியில் இருந்து பகல் நேரத்தில் சென்னை செல்ல ரயில் இல்லை. எனவே சென்னை - செங்கோட்டை ரயிலை மயிலாடுதுறையோடு நிறுத்தப்படாமல் மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.