திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ளது நாராயணபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால், அடுத்தும் பெண் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என பெயர் வைப்பார்கள். அப்படி வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்று இந்த கிராமத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை.
இந்த கிராமத்தில் உள்ள அசோகன் என்பவருக்கு முதல் இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைகளாக பிறந்தனர். இரண்டாவது குழந்தைக்கு 'வேண்டாம்' என பெயர் வைத்தார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார் 'வேண்டாம்'. பின்னர் பொறியியல் படிப்பில் சேர ஆசைப்பட்டார். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஸ்காலர் ஷிப் உதவியோடு பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
பள்ளியில் படிக்கும்போதே சக மாணவர்கள், மாணவிகள் 'வேண்டாம்' என தன் பெயரை சொல்லி கிண்டல் செய்கின்றனர் என்றும், தற்போது கல்லூரியில் படிக்கும்போதும் கிண்டல் செய்கின்றனர் என்றும் பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். அதற்கு அவரது பெற்றோர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி வந்தனர்.
இந்த கல்லூரியில் தற்போது 'வேண்டாம்' மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் ஜப்பான் நிறுவனம் இவரை வேலைக்கு தேர்ந்தெடுத்தது. தான் வேலைக்கு தேர்வாகி உள்ளதை தனது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் 'வேண்டாம்'. என்னவென்றால் இவருக்கு ஆண்டு சம்பளம் ரூபாய் 22 லட்சம்.
ஜப்பான் நிறுவனத்தில் ரூபாய் 22 லட்சத்திற்கு சம்பளத்தில் வேலை கிடைத்ததால் நான் பிரபலமாகவில்லை. 'வேண்டாம்' என்ற பெயர் கொண்ட இந்த மாணவியை ஜப்பான் நிறுவனம் வேண்டும் என்று கேட்பதால்தான் பிரபலமாகி உள்ளேன் எனக் கூறிய 'வேண்டாம்', தங்கள் ஊரான நாராயணபுரத்தில் தன் பெயர் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களும் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றார்.