ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கன்னிகாபுரம் பகுதியில் சர்வே எண் 148-ல் 50 ஆண்டுகளாக 105 பேர் வீடுகள் கட்டி குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு துறைகளிடம் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனப் பல மனுக்கள் வழங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்குவதற்கான இடம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் இது குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்கச் சென்றால், பட்டா வழங்குவதற்கான வழங்கப்பட்ட மனுக்கள் மற்றும் கோப்பு ஆவணங்கள் காணவில்லை என அலட்சியமாகப் பதில் அளிப்பதாகக் கூறப்படுகிறது
இதனைக் கண்டித்து வருகின்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின்போது, 105 குடும்பத்தினருக்கும் சிறப்பு முகாம் அமைத்து வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னிகாபுரம் பகுதியில் வீட்டுமனை பட்டா வேண்டி 50 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 105 குடும்பத்தினர் ஒன்றிணைந்து கைகளில் தட்டை ஏந்தி மடிப்பிச்சை கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கி உள்ளனர்.