கடலூர் மாவட்டத்தில் கடலூர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகவும், சிதம்பரம் நகரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் எனச் சிதம்பரம் சுற்றுலா மற்றும் ஆன்மீக நகரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாகக் கோயம்புத்தூர், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு போதிய ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் வணிகர்கள், அரசு, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயில், மயிலாடுதுறை கோவை ஜென் சகாப்தி விரைவு ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர், சிபிஎம், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உண்ணாவிரதம், ரயில் மறியல், கோரிக்கை முழக்கப் போராட்டம் என முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமையில் இது குறித்து 2 கட்ட அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 7-ஆம் தேதி ஜென்சதாப்தி, மைசூர் ரயிலைக் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலால் ரயிலை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் அறிவித்த ரயிலை உடனே இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தக சங்கத்தினர் சார் ஆட்சியரைச் சந்தித்து ஜூன் மாதம் கடிதம் அளித்தனர்.
இதனையொட்டி நீண்ட கால பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே முதல் கட்டமாக மயிலாடுதுறை - மைசூர் 16231/ 16232 விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையறிந்த சிதம்பரம், கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடலூர் துறைமுகத்தில் ரயில் பெட்டிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் வசதி, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியவர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் மயிலாடுதுறைக்குக் காலை 7 மணிக்கு மைசூர் ரயில் வரும் 7.05 கடலூர் துறைமுகத்திற்கு புறப்பட்டுச் செல்லும் முதல் நாள் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படும் அடுத்த நாள் தான் நேரம் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.