கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு அதன்படி விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்கட்ட முகாம் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பெறும் முகாம் வரும் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தநிலையில் ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக முதல்வர் தற்பொழுது தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகளின் அடிப்படையில், 'மாற்றுத்திறனாளி, ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின் பெண்களுக்கும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 18 முதல் 20 வரை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.