புதுக்கோட்டை மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதி இல்லை என்றாலும் தேர்தல் பணியில் ஈடுபடும் 1724 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தங்களது தபால் வாக்குகளை பெற்றுக் கொண்டனர். இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாக்கு பதிவு நடந்தது. 50 சதவீதம் போலிசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் வாக்களித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தும் நாடாளுமன்ற தொகுதி இல்லை. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடக்க உள்ளது. வாக்குசாவடிகளுக்கான பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகள் மற்றும் ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு பணியில் 1519 போலிசாரும் 206 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது என்பதால் இவர்களுக்கு தபால் வாக்குகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள சுமார 800- ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டையை காண்பித்து நீண்ட வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர். மற்ற போலிசார் மற்றும் ஊர்காவல் படையினர் தங்களது வாக்குகளை தபால் மூலம் அனுப்ப உள்ளனர்.
கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை அதிரடிப்படையில் உள்ள போலிசாரிடம் சிலர் அ.ம.மு.கவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று வாக்கு சீட்டுகளை கேட்டு பெற்றுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பும் ஏற்பட்டது. இருந்தாலும் தங்கள் ஜனநாயக கடமையை நேரடியாக செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் சுமார் 800 பேர் நேரடியாக வாக்களித்தனர்.