சத்தியமங்கலம் காடு என்றால் ஒரு காலத்தில் அது சந்தன வீரப்பன் காடு என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. அப்போதெல்லாம் காட்டுக்குள் பயமுறுத்தும் விலங்கு என்றால் பெரும்பாலும் காட்டு யானைகள் தான் அடுத்து சில பகுதிகளில் காட்டெருமைகள் இருக்கும் புலிகள் மற்றும் செந்நாய்கள் காணப்படுவது கர்நாடகா வனப்பகுதியான பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் தான்.
பிறகு 2000 வருட துவக்கத்தில் தாளவாடி மலைப்பகுதிகளுக்கு சிறுத்தைகள் மெல்ல மெல்ல வர தொடங்கியது. அடுத்து புலிகளும் வனப்பரப்பில் வந்தது. இதன் பிறகே 2015 ல் சத்தியமங்கலம் காடு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இப்போது புலிகளை காட்டிலும் சிறுத்தைகள் பெருகிவிட்டது.
பூனை குட்டி போல் சிறுத்தைகளும் இனப்பெருக்கம் மூலம் காட்டுக்குள் ஆங்காங்கே குட்டி போட தொடங்கி விட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை மட்டுமில்லாமல் யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது அடர்ந்த வனத்தை விட்டு வெளியேறி சமவெளி பகுதிக்கு வந்து அங்கு விவசாயிகள் விளைவித்துள்ள பயிர்களை சேதப்படுத்துவதோடு, கால்நடைகளையும் அடித்துக் கொல்வதும் என கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டமுதுகரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் என்பவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்பு வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை கரும்பு வெட்டும் பணிக்காக சென்ற கூலித் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது கரும்புத் தோட்டத்தில் இரண்டு சிறுத்தை குட்டிகள் ஒன்றோடொன்று விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சிறுத்தை குட்டிகள் இருந்த இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டுள்ளனர். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி ஆனால் இதுவரை சிறுத்தைகள் இங்கு வந்ததில்லை. இப்போது இங்கு குடிபுக தொடங்கி சிறுத்தை கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு குட்டி போட்டிருக்கிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டிகள் மீட்கப்பட்டதால் தாய் சிறுத்தை தனது குட்டிகளுக்கு பாலூட்ட இங்கு உறுதியாக வரும் அப்போது குட்டிகளை காணாமல் கோபத்துடன் மலை வாசிகளின் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுமோ என்ற உயிர் பயத்தில் தொட்டமுதுகரை உள்ளிட்ட குக்கிராம மக்கள் உயிர் பயத்தில் உள்ளார்கள்.