Skip to main content

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு    

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
pazha nedumaran


'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை கடந்த 2002ஆம் ஆண்டு வெளியிட்டார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், பழ.நெடுமாறனிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் இருந்து, 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார். 
 

தான் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழ.நெடுமாறன் எழுதிய அந்த புத்தகங்களை திரும்ப வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், பழ நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார். 
 

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழ. நெடுமாறன் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Chief Minister MK Stalin resilience about Pazha Nedumaran

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இதையடுத்து மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 190 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் அப்பல்லோ சந்திப்பில் 150 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து மதுரை திரும்பிய முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பழ. நெடுமாறன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

 

Chief Minister MK Stalin resilience about Pazha Nedumaran

 

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் உடல் நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். பொடாவில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம். அய்யா பழ. நெடுமாறன் விரைந்து நலம் பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

“எங்க அண்ணன் வந்துட்டு தான் சொல்லுவார்; அதுதான் அவரது பழக்கம்” - சீமான்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Seeman's reply to Pala Nedumaran's comment

 

இன்று காலை பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது இன்று அரசியல் களத்தை விவாதிக்க வைத்துள்ளது. அதேவேளையில் பழ.நெடுமாறன் கூறியது உண்மையில்லை என இலங்கை ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “பாலசந்திரனை இறக்கக் கொடுத்துவிட்டு அவர் பத்திரமாகத் தப்பி இருப்பார் என நினைக்கிறீர்களா. எந்த சூழலிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என வீரமாக சண்டை செய்தவர். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப் போகிற கோழை என அவரை நினைக்கிறீர்களா? ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு 15 ஆண்டுகள் பத்திரமாகப் பதுங்கி இருந்து எதையும் பேசாமல் இருப்பார் என நினைக்கிறீர்களா?

 

இரண்டாவது, சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன். வந்துவிட்டு சொல்லுவார். அதுதான் அவரது பழக்கம். அதை அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்பதை எங்களுக்கு கற்பித்தவர். அதனால் தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. மக்களுக்கு முன் தோன்றுவார் எனச் சொல்கிறார்கள். தோன்றும் போது பேசுவோம். ஐயா சொல்லுவது போல் அவர் நேரில் வந்துவிட்டால் அதன் பிறகு பேசுவோம்” எனக் கூறினார்.