திருவண்ணாமலை நகராட்சியில் தொழில்வரி அதிகமாக வசூலிப்பது, கடை வாடகை உயர்த்தியது மட்டுமல்லாமல் உடனடியாக வரியைச் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது, கடைகளைப் பூட்டுகிறார்கள் எனச் சொல்லி திருவண்ணாமலை நகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மார்ச் 14ந்தேதி கடையடைப்பு செய்தனர். இந்தக் கடையடைப்புக்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா வந்துயிருந்தார். அவரின் தலைமையில் வியாபாரிகளோடு சேர்ந்த நகராட்சியின் போக்கைக் கண்டித்து போராட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட திமுக தனது ஆதரவை தெரிவித்திருந்தது.
வியாபாரிகளின் மனதில் ஆளும்கட்சியான அதிமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் கவனத்துக்கு அதிமுகவினர் கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து மார்ச் 15ந்தேதி அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்காக திருவண்ணாமலை வந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டவர், இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அதன்பின்னர் நகராட்சி ஆணையாளர் நவேந்திரனை, தான் இருந்த திருவண்ணாமலை மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு வரவைத்தார். அங்கு அமைச்சருடன், முன்னால் அமைச்சர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கட்சி நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினரை வைத்துக்கொண்டு ஆணையாளரைக் கேள்வி கேட்டுள்ளார் அமைச்சர். அப்போது முன்னால் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கோபமாக கடுமையான வார்த்தைகளில் நகராட்சி ஆணையரைப் பேசியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அதிகாரிகள் சிலர் கூறும்போது, நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஒரு அரசு அதிகாரி. அவரை அமைச்சர் தனது வீட்டுக்கு வரவைத்து பேசியிருக்கலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சுற்றுலா மாளிகை போன்ற அரசு இடங்களுக்கு வரவைத்து பேசியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு அதிகாரியை கட்சி அலுவலகத்துக்கு வரவைத்து கேள்வி கேட்பதோடு, அதிகாரத்தில் இல்லாத முன்னால் அமைச்சர் மோசமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சரின் செயல், அதிகாரிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.