புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100 பள்ளிகளிலும், திருவரங்குளம் ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளிலும் பழுதான; ஆபத்தான கட்டடங்களில் வகுப்புகள் நடக்கின்றன. கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், பல பள்ளிகள் கட்டடம் இல்லாமல் மரத்தடிகளிலும் சமுதாயக் கூடங்களிலும் நடத்தப்படுகின்றன. இந்த பழுதான கட்டடங்களை அகற்றி புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துள்ளது.
இந்த வகையில், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1900ம் ஆண்டு திண்ணைப் பள்ளிக்கூடமாக தொடங்கி 1937ம் ஆண்டு கட்டடத்தில் நடத்தப்பட்டது. சுமார் 123 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியில் சுமார் 80 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் அங்கன்வாடிக்காக கட்டப்பட்ட உணவு உண்ணும் கூடத்தை பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறையாக மாற்றிக் கொண்டு அங்கன்வாடியை சமுதாயக் கூடத்திற்கு மாற்றி செயல்படுத்தி வருகின்றனர்.
போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் அமர நெருக்கடி ஏற்பட்டதால் மாணவர்களின் புத்தகப் பைகளை வெளியில் வைத்துவிட்டே வகுப்புகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டடம்; பழைய பழுதான ஆபத்தான கட்டடங்களை அகற்ற வேண்டும்; நாய் தொல்லையிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற சுற்றுச்சுவர் வேண்டும்; கூடுதல் ஆசிரியர் வேண்டும் என்று பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பல வருடமாக வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் இன்று பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மரத்தடியில் அமர வைத்து தாங்களும் அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகம், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், வட்டாட்சியர் செந்தில் நாயகி, துணை வட்டாட்சியர் பழனியப்பன் உள்பட பல அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.